Saturday , December 16 2017
Breaking News
Home / latest-update / வடக்கு முதல்வருக்கு ஆதரவாக நாளைய தினம் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ் மக்கள் பேரவை

வடக்கு முதல்வருக்கு ஆதரவாக நாளைய தினம் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ் மக்கள் பேரவை

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான கபட நாடகங்களுக்கு எமது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக வடகிழக்கில் நாளைய தினம் பொது கடையடைப்பு ஒன்றிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்மக்கள் பேரவை இன்று விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறுகிய முன் அறிவிப்பை பொறுத்துக்கொண்டு, இனத்தின் நலன்கருதி எமது உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன் அனைவரும் இந்த கடையடைப்புக்கு ஆதரவு தரவேண்டும் என நாம் வேண்டுகிறோம்.

முதல்வர் மீதான நெருக்கடிகளின் உச்சமாக, இந்த முறைகேடுகள் குறித்த விசாரணையில் குறிப்பிடப்பட்டவர்களை பாதுகாக்கும் நோக்குடன் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை சிறிலங்கா அரசின் அங்கத்தவர்களுடன் இணைந்து சில தமிழ் அரசியல்வாதிகள் கொண்டுவந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், இதை வெறும் மாகாண சபையின் நிர்வாக சிக்கலாகவோ அல்லது கட்சி உறுப்பினர்களின் பதவி மோகம் காரணமாக எழுந்த உட்கட்சி பிரச்சினையாகவோ இனியும் கருதமுடியாது.

தமிழர் இனப்பிரச்சினை தொடர்பிலான ஸ்ரீலங்கா அரசின் கபட நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக இருந்தமைக்காக தமிழர்களின் கோட்பாடுகளை சமரசமின்றி முன்கொண்டு சென்றமைக்காக அவர் மீது இந்த நெருக்கடியை அரசும், அரசு சார்ந்தவர்களும் கொண்டு வந்திருக்கின்ற நிலையில்,

இனத்தின் நலன்சார்ந்து இந்தக் கொள்கைகளை முன்கொண்டு சென்றமைக்காக அவர் இலக்கு வைக்கப்பட்டாரோ அந்தக் கொள்கைகள் மக்களின் கொள்கைகளே என்பதை மீண்டும் வெளிப்படுத்தும் நோக்குடன், பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை கோருகின்றது.

வடமாகாணசபை முதலமைச்சரின் மீது சில மாகாணசபை உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தமிழ் மக்கள் சார்பில் கடுமையான கண்டனத்தை தமிழ் மக்கள் பேரவை பதிவு செய்கிறது.

எமது மக்களின் இலட்சிய அரசியல் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மீதான இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானமும் அவர் தன் ஆட்சியை செவ்வனே கொண்டு செல்லமுடியாது.

ஏற்படுத்தப்பட்ட இடையூறுகளும் திடீரென எழுந்த ஒன்றல்ல. சிறிலங்கா அரசின் தமிழர் விரோதப்போக்கை எதுவித மூடிமறைத்தல் இன்றி வெளிப்படுத்தியமையும், தமிழர்களின் அரசியல் அபிலாசைகளில் எந்தவித விட்டுக்கொடுப்புகளுமின்றி இருந்தமையும் அந்தக் கோரிக்கைகளை சமரசமின்றி சர்வதேச இராஜதந்திரிகளிடம்

முன்வைத்து அழிக்கப்படுகின்ற எமது மக்கள் சார்பாக குரல் கொடுத்தமையுமே தற்போது நிகழும் அரசியல் கபட நாடகங்களின் பின்புலமாகும் என்பது தற்போது வெளிப்பட்டிருக்கிறது.

தமிழ்த் தேசியம் குறித்த முதலமைச்சர் அவர்களின் புரிதலும் சமரசமற்று அதை மக்கள் மத்தியில் முன்னெடுத்தமையும் சிறிலங்கா அரசு தனது அடக்கியாளும் திட்டத்தைத் தன் பிரமுகர்கள் மூலம் முன்னெடுக்க பாரிய இடையூறாக இருந்தது.

குறிப்பாக, மாகாணசபைக்குள் தமிழர் அரசியலை முடக்கிவிடும் கபட நோக்கோடு , சிறிலங்கா அரசும் சில தமிழ் அரசியல்வாதிகளும் தமது முயற்சிகளை செய்து கொண்டு வருகையிலே , 13 ஆம் திருத்தத்தின் வழியிலான மாகாணசபை முறைமை எமது அரசியல் வேட்கையை ஒரு போதும் பூர்த்தி செய்யாது.

தன் ஆட்சி அனுபவம் மூலமாகவும் தன் சட்ட நிபுணத்துவம் ஊடாகவும் அவர் மிகத்தெளிவாக மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் வடக்கு மாகாணசபையில் இருந்து கொண்டே அறிவித்தமை சிறிலங்கா அரசின் கபட திட்டத்தை முறியடித்திருந்தது.

அதுபோலவே, தொடர்ச்சியாக எமது மக்கள் மீது நடத்தப்படுவது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பே என்பதையும் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்றே இதற்கான பொறுப்புக்கூறலிற்கும் நீதிக்கும் வழிசமைக்கும் என்பதையும் மிக ஆணித்தரமாக, ஒரு ஜனநாயக மன்றின் தீர்மானமாக வெளிப்படுத்தப்பட்டமையும் அது சர்வதேச அரங்கில் மிகப்பெரிய கவனிப்பிற்குள்ளாகியமையும் சிறிலங்கா அரசினால் கடும் விசனத்துடனேயே பார்க்கப்பட்டது.

எமக்கு இழைக்கப்பட்டது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையே என்பதை தனக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வந்த அழுத்தங்களையும் மீறி முதலமைச்சர் என்று அறிவித்தாரோ, ஒரு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைதான் எமக்கான நீதியை பெற்றுக்கொடுக்குமென்பதை வெளிப்படையாக எப்போது

அறிவித்தாரோ இந்த மாகாணசபை முறைமை எமக்கான தீர்வாக அமையாது என்பதை ஆணித்தரமாக என்று தெரிவித்தாரோ அன்றுமுதல் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் சிறிலங்கா அரசாலும் சில தமிழ் அரசியல்வாதிகளாலும் தொடர்ச்சியான நெருக்கடிகளுக்குள்ளாக்கப்பட்டார்.

இன்று, தனது ஆட்சியின் கீழ் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட முறைகேடுகளை விசாரிக்க நேர்மையுடனும் தற்துணிவுடனும் ஒரு விசாரணைக்குழுவை நியமித்து எமது அரசியலில் முறைகேடுகளுக்கு இடமே இருக்க முடியாது எனும் தூய்மையான இலட்சியத்தை பேச்சில் மட்டுமல்லாது செயலிலும் காட்டி இருந்தார்.

முதலமைச்சர் முன் கொண்டு செல்லும் எமது அரசியலின் அடிப்படைக்கொள்கைகளுக்கு பின்னால் எமது மக்கள் எப்போதும் அணிதிரண்டு வருவார்கள் என்பதை நாம் எமது அணிதிரள்வுகள் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும் எனவும் தமிழ் மக்கள் பேரவை கோருகிறது.

சகல உள் புற அழுத்தங்களையும தாண்டி எமது தேசத்தின் அடிப்படை அரசியற் கோட்பாடுகளுக்கு தலைமையேற்று முன்கொண்டு செல்லுமாறு தமிழினத்தின் பெயரால் மக்களின் முதல்வருக்கு அழைப்பு விடுக்கிறோம்.

மேலும், பதவி போன்ற அற்ப பேரங்களுக்காக கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காது , எமக்காக புரியப்பட்ட தியாகங் களையும் அர்ப்பணிப்புகளையும் மனதில் கொண்டு மனச்சாட்சியுடன் செயற்பட முன்வருமாறு வடமாகாண சபையின் அங்கத்தவர்கள் அனைவரையும் இனத்தின் பெயரால் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் தமிழ்மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

About admin

Check Also

T10 கிரிக்கெட் லீக்: அப்ரிடி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தல்

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் தொடரில் அப்ரிடி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். ஷார்ஜாவில் T10 கிரிக்கெட் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*