முன்னாள் அமைச்சர் ரிஷாட் கொழும்பு, மன்னார் வீடுகளிலும் இல்லை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் கொழும்பு, மன்னார் வீடுகளிலும் இல்லை

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 6 குழுக்களை ஈடுபடுத்தி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இதுவரை கைது செய்யப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

ரிஷாத் பதியூதீனின் கொழும்பு மற்றும் மன்னாரில் உள்ள வீடுகளில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சோதனை செய்திருந்த போதும், அவர் அங்கு இருக்கவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, புத்தளத்தில் இருந்து மன்னார் வரையில் இலங்கை பேருந்து சேவைக்கு சொந்தமான பேருந்துகளில் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு போக்குவரத்து சேவையை வழங்கியதன் மூலம், பொதுச் சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறியமை முதலான குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

இதன்படி, பிடியாணையை பெற்று அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் காவற்துறை மா அதிபருக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில் பிடியாணை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தனர்.

இதன்போது, குறித்த கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான் ப்ரியன்த லியனகே, பொது சொத்து சட்டத்தின் குற்றச்சாட்டின் கீழ் எவரையும் கைது செய்ய பிடியாணை அவசியமில்லை என குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தின் இந்த அறிவித்தலின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீனை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் காவற்துறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.