 
                            ஓமன் அல் சீப் பகுதியில் உள்ள எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஐரோப்பா கண்டத்தில் காணப்படும் அரிய வகை ‘யூரேசியன் டோட்டரல்’ பறவைகள் காணப்பட்டு வருகிறது.
ஓமன் அல் சீப் பகுதியில் உள்ள எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஐரோப்பா கண்டத்தில் காணப்படும் அரிய வகை ‘யூரேசியன் டோட்டரல்’ பறவைகள் காணப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளில் குளிர்காலங்களில் மட்டுமே இந்த வகை பறவைகள் மிக அரிதாக தென்படுகின்றன. இந்த பறவைகள் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் அல் பத்தினா மாகாணத்தில் உள்ள சுகர் பகுதியில் கடைசியாக தென்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு குளிர்காலம் தொடங்க உள்ள நிலையில் தற்போது அல் சீப் பகுதியில் இந்த பறவைகள் வந்துள்ளன.
மிகச்சிறிய அளவிலான இந்த பறவையின் கண்களில் பெரிய வெள்ளைக்கோடுகள் உள்ளது. நெஞ்சுப்பகுதியில் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற வண்ணத்திலான வளையம் போன்ற நிறம் காணப்படுகிறது. தற்போது ஓமன் நாட்டில் பதிவு செய்யப்பட்ட 139 பறவை இனங்களில் இதுவும் ஒன்றாகும்.
மிகவும் வித்தியாசமாக இந்த பறவையினத்தில் ஆண் பறவை மட்டுமே அடைகாக்கும். அதேபோல் பெண் பறவைகள் ஆண் பறவைகளை விட வண்ணமயமாக காணப்படும். தற்போது இந்த பறவைகளை காண இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் அல் சீப் பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
 
                     
                                            