
டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் டெல்லி புறநகரில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலையே காணப்படுகிறது.
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
2 மாதங்களுக்கு மேலாக அவர்களது போராட்டம் நீடித்தபடி உள்ளது. மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் 11 தடவை பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த முடிவும் எட்டப்படாததால் விவசாயிகள் போராட்டம் நீடித்தப்படி உள்ளது.
இந்தநிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்தினார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 500 போலீசார் காயமடைந்தனர். 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதுதொடர்பாக டெல்லி போலீசார் 33 வழக்குகள் பதிவு செய்து விவசாய சங்க தலைவர்களுக்கு நோட்டீசு அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள். இது விவசாயிகளை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளது. இதனால் போராட்டத்தை தீவிரப்படுத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே விவசாயிகள் தொடர் போராட்டத்தால் டெல்லி எல்லைகளில் உள்ள கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தங்கள் பகுதிகளில் இருந்து விவசாயிகள் வெளியேற வேண்டும் என்று நேற்று போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கும், விவசாயிகளுக்கும் சில இடங்களில் மோதல் ஏற்பட்டது.
நேற்று பிற்பகல் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இன்றும் டெல்லி எல்லைகளில் விவசாயிகளுக்கும், கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இந்தநிலையில் விவசாயிகளை எல்லையில் இருந்து காலி செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என்று விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதோடு விவசாயிகள் மேலும் திரண்டு வருமாறு அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.
இதைஏற்று பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டு உள்ளனர். இன்றும், நாளையும் 3 லட்சம் பேரை கூடுதலாக திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
இதை கருத்தில் கொண்டே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மேற்கு வங்காளம் செல்லும் சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு டெல்லியில் இருக்கிறார். விவசாயிகள் இருக்கும் எல்லை பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.
இதற்கிடையே கிராம மக்கள் மீதும், போலீசார் மீதும் தாக்குதல் நடத்திய விவசாயிகள் மீது டெல்லி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளனர். போலீசாரை ஒரு சீக்கிய விவசாயி வாளால் வெட்டினார். அவர் உள்பட 44 விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் சிலரை கைது செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. இதுதவிர விவசாயி சங்க தலைவரையும் விசாரணைக்கு வருமாறு வாட்ஸ்அப் மூலம் போலீசார் அழைத்து உள்ளனர்.
போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு வரும் நிலையில் விவசாயிகளும் தங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி வருகிறார்கள். மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக விவசாய சங்க தலைவர்கள் அறிவித்தனர். அதன்படி இன்று காலை 9 மணிக்கு விவசாயிகள் உண்ணாவிரதம் தொடங்கியது.
மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. அடுத்தகட்ட போராட்டம் பற்றி இன்று இரவு ஆலோசனை நடத்தி அறிவிப்போம் என்று விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் டெல்லி புறநகரில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலையே காணப்படுகிறது.