
டிராக்டர் பேரணியில் வன்முறையில் ஈடுபட்ட 84 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் கடந்த 26-ந்தேதி டிராக்டர் பேரணி நடத்தினார்கள். இந்த பேரணி குறிப்பிட்ட பாதைகள் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்று போலீசார் அனுமதி அளித்து இருந்தனர்.
ஆனால் அதை மீறி போலீஸ் தடுப்பு அரண்களை உடைத்துக்கொண்டு டெல்லியின் மைய பகுதிக்குள் விவசாயிகள் நுழைந்தனர். பின்னர் செங்கோட்டைக்கு சென்ற அவர்கள் போலீஸ் காவலையும் மீறி உள்ளே நுழைந்தனர்.
அப்போது அவர்களை தடுத்த போலீசார் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ள கம்பத்தில் மத கொடியை ஏற்றினார்கள். இது தேசிய கொடியை அவமதிக்கும் செயலாக கருதப்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தேச துரோக வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தற்போது வரை 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 84 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே விவசாய சங்கங்களை சேர்ந்த 9 தலைவர்களிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் முடிவு செய்தனர்.
எனவே நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பினார்கள். ஆனால் இதுவரை விவசாயிகள் போலீசார் முன் ஆஜராகவில்லை.