நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 70,000ஐக் கடந்தது!
நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 70,000 கடந்துள்ளது.
நேற்றைய தினம் 887 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதையடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 70,235 ஆக உயர்வடைந்துள்ளது.
பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 859 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 19 பேருக்கும் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 66,225 ஆக அதிகரித்துள்ளது.
5,729 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றைய தினம் மாத்திரம் கொவிட்-19 தொற்றில் இருந்து மேலும் 740 பேர் குணமடைந்தனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 64,141 ஆக அதிகரித்துள்ளது.
நோயாளர்களின் எண்ணிக்கை 70,000 ஐக் கடந்துள்ள நிலையில், கொவிட்-19 பரவல் தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 90ஆவது இடத்திற்கு முன்னகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.