
மத்திய பிரதேசத்தில் பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்து 35 பேர் பலியாகினர். 12 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்தியபிரதேச மாநிலம் சிதி மாவட்டம் பாட்னா கிராமம் அருகே பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 54 பேர் பயணம் செய்தனர்.
அப்போது அப்பகுதியில் கால்வாய் செல்லும் மேம்பாலத்தில் பஸ் சென்றபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
இதனால் பயணிகள் அலறினார்கள். தறிகெட்டு ஓடிய பஸ் கால்வாய்க்குள் பாய்ந்து கவிழ்ந்தது. அதில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கினர். தகவல் அறிந்ததும் கிராம மக்கள், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
7 பேர் கால்வாயில் நீந்தியபடி கரைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை கிராம மக்கள் மீட்டனர்.
மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கால்வாயில் அதிகளவு தண்ணீர் செல்வதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.
கால்வாயில் இருந்து 35 பயணிகளின் உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 12 பேரை காணவில்லை அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அவர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கால்வாயில் வேகமாக தண்ணீர் செல்வதால் பன்சாகர் மற்றும் ஷிஹவால் கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது குறைக்கப்பட்டு இருக்கிறது.
மீட்பு படையினர் ரப்பர் படகில் சென்று மாயமானவர்களை தேடி வருகிறார்கள்.
விபத்து குறித்து அறிந்த மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் மீட்பு பணியை துரிதப்படுத்தினார்.
விபத்துக்குள்ளான பஸ் தினமும் செல்லும் பகுதியில் நெரிசல் இருந்ததால் டிரைவர் மாற்று பாதையாக கால்வாய் மேம்பாலத்தில் செல்லும்போது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.