புதிய அதிவேக நெடுஞ்சாலை, மேம்பாலங்களின் நிர்மாணப் பணிகள் பிரதமரினால் அங்குரார்ப்பணம்!

புதிய அதிவேக நெடுஞ்சாலை, மேம்பாலங்களின் நிர்மாணப் பணிகள் பிரதமரினால் அங்குரார்ப்பணம்!

புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரையில் தூண்களின் மீது அமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை மற்றும் புதிய மேம்பாலங்கள் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக அலரி மாளிகையிலிருந்து இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

16.4 கிலோ மீற்றர் தூரத்தை கொண்ட புதிய களனி பாலம் முதல் அத்துருகிரிய வரையான குறித்த அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப்பணிகள் நான்கு கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்காக 134.9 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகரங்களைப் போன்றே, நாட்டின் ஏனைய பிரதான நகரங்களிலும் நிலவும் கடுமையான வாகன நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பில் பாதீட்டில் விசேட அவதான செலுத்தப்பட்டிருந்தது.

அதற்கமையவே, பிரதமரின் ஆலோசனைக்கமைய, கொழும்பு - கண்டி நகரங்களை அண்மித்ததாக நிலவும் பாரிய வாகன நெரிசல்களுக்கு தீர்வாக மேம்பாலங்களை அமைக்கவும், புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரையில் அதிவேக நெடுஞ்சாலையொன்றை நிர்மாணப்பதற்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.

அவ்வாறே, கொஹுவளை சந்தி ஒரு மேம்பாலமும், கண்டி, கெட்டம்பே சந்தி ஒரு மேம்பாலமும் அமைக்கப்படவுள்ளன.

கொம்பனிதெரு தொடருந்து கடவை ஊடாக நீதியரசர் அக்பர் மாவத்தையையும், உத்ராநந்த மாவத்தையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதேவேளை, பேரே வாவி மற்றும் கொம்பனித்தெரு ஊடாக சாரணர் வீதி மற்றும் சித்தம்பலம் ஏ கார்டினர் வீதிகளை  இணைக்கும் மற்றொரு மேம்பாலமும் அமைக்கப்படவுள்ளன.