
பாடசாலை போக்குவரத்து சேவைக்கான கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்!
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் சிற்றூர்ந்துக்கான கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த சந்தர்ப்பத்தில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் சிற்றூர்ந்துகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என சில பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கங்கள் அறிவித்துள்ளன.
அரசாங்கத்தினால் அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதோடு நாளை பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் மாணவர்களை அழைத்து செல்லும் வாகனங்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என மாகாணங்களுக்கு இடையிலான பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களுக்கான கட்டணம் 20 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் ருவான் பிரசாந்த் கோரியுள்ளார்.
அத்துடன் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு தங்களது சங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்தார்.