மரம் வீழ்ந்து உந்துருளி - முச்சக்கரவண்டி சேதம்!

மரம் வீழ்ந்து உந்துருளி - முச்சக்கரவண்டி சேதம்!

கண்டி- யாழ்ப்பாணம் ஏ9 பிரதான வீதியில், தம்புள்ளை வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் அலங்காரத்திற்காக நடப்பட்டிருந்த மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் உந்துருளியொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் சேதமடைந்துள்ளதாக தம்புள்ளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

தம்புள்ளை நகரை அழகுபடுத்தும் நோக்கில் தம்புள்ளை மாநகர சபை சில வருடங்களுக்கு முன்னர் பிரதான வீதியின் இருபுறங்களிலும் இந்த மரங்களை நட்டிருந்தது.

மரங்கள் வளரும்போது நடைபாதையில் வெடிப்பு ஏற்பட்டதால் பாதசாரிகளும் இடையூறு விளைவிப்பதாலும் இவற்றில் பல மரங்கள்  நகர சபையினால் வெட்டப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று (19) காலை மரமொன்று வேரோடு சாய்ந்து வீதியில் வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் நோயாளர் ஒருவரை பார்வையிட வந்த இளைஞன் ஒருவர் தனது உந்துருளியை வீதிக்கு அருகில் நிறுத்திவிட்டு வைத்தியசாலைக்கு சென்றிருந்தபோது அதன்மீது இந்த மரம் வீழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் எவ்வித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.