திருத்தப்பட்ட கட்டணத்தை அறவிடாத பேருந்துகளை கண்டறிய இன்று முதல் சோதனை

திருத்தப்பட்ட கட்டணத்தை அறவிடாத பேருந்துகளை கண்டறிய இன்று முதல் சோதனை

திருத்தப்பட்ட பேருந்துக் கட்டணப் பட்டியலைக் காட்சிப்படுத்தாமல் அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளைச் சோதனையிடும் நடவடிக்கை இன்று (3) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ தெரிவித்தார்.

அதன்படி, திருத்தப்பட்ட பேருந்துக் கட்டணப் பட்டியலை அனைத்துப் பயணிகளும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்துவது கட்டாயம் எனவும், அங்கீகரிக்கப்பட்ட பேருந்துக் கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
 

கடந்த 29 ஆம் திகதி டீசல் விலைக் குறைக்கப்பட்ட நிலையில், கடந்த 31 ஆம் திகதி முதல் பேருந்துக் கட்டணத் திருத்தம் அமுலுக்கு வந்தது. ஏழு பிராந்திய அலுவலகங்கள் மூலம் பேருந்து உரிமையாளர்களுக்குத் திருத்தப்பட்ட பேருந்துக் கட்டணப் பட்டியல் வழங்கப்பட்டது.

எனினும், தற்போது வரை சில பேருந்துகள் பயணிகளுக்குத் தெளிவாகத் தெரியும் வகையில் ஆவணத்தைக் காட்டாமல் அதிகக் கட்டணம் வசூலிக்க முனைவதாகப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து முறைப்பாடுகள் வந்துள்ளது.

எனவே, இன்று முதல் அனைத்துப் பேருந்துகளும் பயணத்தை ஆரம்பிக்கும் முன்னர்த் திருத்தப்பட்ட கட்டணப் பட்டியலைக் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செல்லாத பேருந்துகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைப் பரிசோதிப்பதற்காகப் பெஸ்டியன் மாவத்தை, பொரளை, ஹோமாகம, இரத்மலானை, களுத்துறை, ஜா-எல, கம்பஹா மற்றும் பத்தரமுல்ல பிரதான காரியாலயங்களின் வீதிப் பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பேருந்துக் கட்டணம் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் 0112 860860 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு தலைவர் பிரசன்ன சஞ்சீவ கோரியுள்ளார்.