
இலங்கையில் முக்கிய பகுதிக்கு அபாய எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கை தொடர்பான அறிவிப்பை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காலி மாவட்டத்தின் யக்கலமுல்ல, எல்பிட்டிய மற்றும் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.