தமிழர் தாயகத்தில் உருவாகவுள்ள காற்றாலை மின் திட்டம் -அதானி நிறுவனம் எடுத்துள்ள முடிவு..!
மன்னார் மற்றும் பூநகரி கௌதாரிமுனை பகுதிகளில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 500 மெகாவாட் சூரிய மற்றும் காற்றாலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை அடுத்த ஆண்டு (2024) டிசம்பருக்குள் முடிக்க அதானி நிறுவனம் நம்புவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
தனது டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அதானி குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனில் சர்தானா உள்ளிட்ட அதிகாரிகளுடன் திட்டம் மற்றும் அதன் பணிகளை தொடங்குவதற்கான முன்னேற்றம் குறித்தும், பிரச்சனைகள், சவால்கள் மற்றும் கட்டுமான நேரம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதானி குழுமத்தின் முதலீட்டில் பூநகரி கௌதாரிமுனை பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு இரண்டு கூட்டங்களில் குறித்த நிலையத்தின் நன்மை தீமைகள் மற்றும் அபிவிருத்திகள் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்ட பின்னர் அனுமதி வழங்குவது என இன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.