உத்தரவை மீறி பயணித்த முச்சக்கரவண்டி: பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்..!
லபுதுவ- போகஹவெல்ல வீதியில் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது போத்தல பொலிஸாரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றையதினம் (22.06.2023) பதிவாகியுள்ளது.
இரண்டு தடவை துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையிலும் குறித்த சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
முதல் துப்பாக்கிச் சூட்டின் பின்னரும் நிறுத்தாமல் அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி மீது ரிச்சர்ட் பத்திரன வித்தியாலயத்திற்கு அருகில் பொலிஸார் இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான முச்சக்கர வண்டியின் சாரதி, வீதியில் சென்றுகொண்டிருந்த இன்னொரு முச்சக்கரவண்டியை விபத்துக்குள்ளாக்கிவிட்டு, தனது வாகனத்தை கைவிட்டு தப்பியோடியுள்ளார்.
விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டியின் சாரதி சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய முச்சக்கர வண்டிச்சாரதி தொடர்பில் போத்தல பொலிஸார் தேடுதல் வேட்டையை முன்னெடுத்துள்ளனர்.