
மீண்டும் நடைமுறைக்கு வரும் சட்டம்! ஆபத்தான நிலையில் சுமார் 4 மில்லியன் மக்களின் வேலைவாய்ப்பு
பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளமையினால், நாட்டில் சுமார் 4 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பரேட் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளமையினால், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்க உள்ளனர்.
எனவே, பரேட் சட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தி, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்குக் கடன் மறுசீரமைப்பு, வட்டி சலுகைகள் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அத்துடன், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் சொத்துக்கள் கடன் நிலுவையின் காரணமாக இன்று முதல் ஏலம் விடப்படலாம்.
இதனால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்துக்கு மேல் பங்களிக்கும் குறித்த தரப்பினரின் பங்களிப்பு குறைவடையும்.
அத்துடன், சுமார் 4 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முந்தைய அரசாங்கம் போலவே, தற்போதைய அரசாங்கமும் பொய்கள் மற்றும் தேர்தல் நோக்கான நடவடிக்கைகள் மூலம் குறித்த தரப்பினரை ஏமாற்றியுள்ளதாகவும், நீடித்த தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் சஜித் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், மூன்றிலிரண்டு பெரும்பான்மை மற்றும் நிறைவேற்று அதிகாரமுள்ள அரசாங்கம் இந்த பிரச்சினையிலிருந்து விலக முடியாது எனவும், அந்த தரப்பினருக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.