பெரிய வெங்காயம் தொடர்பாக அரசின் விசித்திர முடிவு - வலுக்கும் கண்டனம்
பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் விசித்திரமான நிபந்தனைகளை விதித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
ஏமாற்று அரசியலையும் நிறுத்தி, பெரிய வெங்காய விவசாயியைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்,
விசேட அறிக்கை ஒன்றில் கருத்து தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நமது நாட்டில் பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலான விடயங்களை தற்போதைய அரசாங்கத்திற்கு தொடர்ந்து முன்வைத்த போதிலும், இன்று எந்த நடைமுறை ரீதியிலான ஏற்பாடுகளும் இல்லாமல், பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் விசித்திரமான நிபந்தனைகளை விதித்துள்ளது.

இங்கு, அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்படும் பெரிய வெங்காயத்தில் ஒரு கிலோவில் 8 வெங்காயங்கள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வெங்காயமும் 125 கிராம் எடை கொண்டனவாகவும், பெரிய வெங்காயத்தின் விட்டம் கொண்டதாகவும் அமைந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் அரசாங்கம் விதித்துள்ளது.
இந்த நிபந்தனைகளை நோக்குமிடத்து, பெரிய வெங்காயச் செய்கை விவசாயிகளிடமிருந்து பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்து கொள்வதை குறைக்கப் பயன்படுத்தப்படும் தந்திரமொன்றாகவே நாம் இதைப் பார்க்கிறோம்.

எனவே, பெரிய வெங்காய விவசாயிக்கு உடனடியாக நீதியை நிலைநாட்டுங்கள். பெரிய வெங்காய விவசாயியை கைவிடும் கொள்கைகளை நிறுத்தி, தமது சொந்த காலில் வாழும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுங்கள்.
பொய்யான அரசியலையும், ஏமாற்று அரசியலையும் நிறுத்தி, பெரிய வெங்காய விவசாயியைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.