தாயையும் ஒரு வயது குழந்தையும் சித்ரவதை செய்த மாமியார்
இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் போலவரத்தில் மாமியார் மருமகளுக்கும் பேர குழந்தைக்கும் சித்திரவதை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலவரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஜங்கா ரெட்டி கூடேமைச் சேர்ந்த வாலிபருடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அந்த இளம்பெண்ணின் கணவரின் தம்பிக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லாததால், மாமியார் மூத்த மருமகளைப் பயன்படுத்தி தன் இளைய மகனுக்கு வாரிசு பெற தீர்மானித்ததாக கூறப்படுகிறது.

இதற்காக, தனது மூத்த மகனை வேலைக்காக வெளியூருக்கு அனுப்பி வைத்து, அவர் இல்லாத நேரத்தில் இளைய மகனுடன் இணையுமாறு மருமகளிடம் மாமியார் வற்புறுத்தியுள்ளார்.
மருமகள் இந்தக் கோரிக்கையை மறுத்தபோது, ஆத்திரமடைந்த மாமியார், தன் மருமகளையும் ஒரு வயது குழந்தையையும் அறையில் பூட்டி, உணவும், குடிநீரும் தராமல் பத்து நாட்களுக்கு மேலாக சித்ரவதை செய்தார்.
இந்த விவரம் மருமகளின் பெற்றோருக்கு தெரியவந்ததும், அவர்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தனர்.
மனித உரிமை ஆணைய அதிகாரிகள் பொலிசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது, மாமியாரும் மைத்துனரும் வீட்டிலிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
பொலிசார் அறையின் கதவை உடைத்து, பசியால் வாடிய இளம்பெண்ணையும் அவரது குழந்தையையும் மீட்டனர்.
இருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மாமியாரையும் மைத்துனரையும் தேடி வருகின்றனர்.