தீவிரமடையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் - அச்சத்தில் நாமல்

தீவிரமடையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் - அச்சத்தில் நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த காலங்களில் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்களின் உயிர்களுடன் விளையாடிய அரசியல்வாதிகள் இப்போது சட்டத்திற்குப் பயப்படத் தொடங்கியுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாமல் தரப்பு சட்டத்தரணிகள் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தில் மிகவும் அவசரமாகக் கேள்வி எழுப்பினார்கள்.

 

சூத்திரதாரி சுரேஷ் சலே அல்ல

“சஹரானின் வாக்குமூலம் எங்கே என்று அவர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால், இப்போது அந்த வாக்குமூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதைப் பற்றிப் பேசாமல் சம்பந்தமில்லாத வெற்றுக்கதைகளை கூறிவருகின்றனர்.

அவர்கள் செய்த குற்றங்களுக்காக இப்போது சட்டம் அவர்களைத் துரத்திக் கொண்டு பின்னால் வருகிறது. இதனால்தான் அவர்கள் தற்போது பெரும் பதற்றமடைந்துள்ளார்கள்.

தீவிரமடையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் - அச்சத்தில் நாமல் | Sri Lanka Easter Attack Investigation Namal Fear

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் எங்கே? வேகம் போதவில்லை, இன்னும் ஒன்றும் நடக்கவில்லையே என்று அவர்கள் எள்ளி நகையாடினார்கள். ஆனால், தற்போது விசாரணைகள் மிகச் சரியான பாதையில் வேகமெடுத்துள்ளன.

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே என்பவர் மாத்திரம் இந்தத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி அல்ல. சுரேஷ் சலே போன்றவர்களைக் கொண்டு 270க்கும் மேற்பட்ட அப்பாவி கத்தோலிக்கப் பக்தர்களைக் கொன்று, மேலும் 500க்கும் அதிகமானோரை அங்கவீனமடைய செய்ய அவருக்கு என்ன தனிப்பட்ட தேவை இருக்கப் போகிறது? இதன் பின்னணியில் ஒரு பாரிய அரசியல் கரம் இருந்தது.

 

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு

பிணங்களின் மீது ஏறி நின்று அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற அந்தப் பேராசைதான் இதன் பின்னணியில் இருந்தது. அப்படிப்பட்ட கொடூரங்களைச் செய்த 'கனவான்கள்' தான் இன்று சமூக ஊடகமான எக்ஸ் (X) தளத்தில் பதிவுகளை இட்டு, 'பொதுமக்களின் பணத்தைச் செலவழித்து பிரான்சுக்குச் சென்று விசாரணை நடத்துவதன் தேவை என்ன?' என்று நம்மிடம் கேள்வி எழுப்புகிறார்கள்.

தீவிரமடையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் - அச்சத்தில் நாமல் | Sri Lanka Easter Attack Investigation Namal Fear

 

பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று சர்வதேச ரீதியில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எவ்வளவு பொதுப்பணம் செலவானாலும் சரி, எவ்வித தயக்கமுமின்றி அதனைச் செலவு செய்து, இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்துவதுதான் தற்போதைய அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும்.

அதனை நிறைவேற்றுவதில் இந்த அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது என்ற உறுதியை நாம் மக்களுக்கு வழங்குகிறோம். இதுவரை காலம் நீங்கள் இந்த நாட்டு மக்களின் பொதுச் சொத்துக்களுடனும், அப்பாவி மக்களின் உயிர்களுடனும் விளையாடினீர்கள். இனிமேலும் இந்த நாட்டில் அவற்றுக்கு ஒருபோதும் இடமில்லை என்பதை மிகத் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்" என அவர் மேலும் தெரிவித்தார்.