
தொடரும் சீரற்ற காலநிலை – மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவை அண்மித்த கடற் பிராந்தியங்களில் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நீண்ட நாள் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும் இது குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனைத் தவிர வங்காள விரிகுடாவின் மத்திய, கிழக்கு, வட கிழக்கு கடற்பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியமுள்ளதால், ஆழமான கடற்பிராந்தியங்களுக்குச் செல்ல வேண்டாம் என ஒரு நாள் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலைய மேலும் அதிகரிக்கம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் இன்று காலை கொழும்பின் பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.