டெல்லி ஆதிக்கத்தை நிறுத்தி, ஹாட்ரிக் தோல்விக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முற்றுப்புள்ளி வைக்குமா?

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் விளங்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வெற்றியோடு தொடங்கிய அணிகள் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்.

 

அதன்பின் டெல்லி அணி மூன்றில் இரண்டு வெற்றியை ருசித்து நான்கு வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் ஹாட்ரிக் தோல்வியை எதிர்கொண்டு பரிதாபமாக 7-வது இடத்தில் உள்ளது.

 

இரண்டு அணிகளும் இதுவரை 20 முறைகள் மோதியுள்ளன. இதில் டெல்லி 9 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 11 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் அணியை பொறுத்த வரைக்கும் முதல் இரண்டு போட்டிகளில் சஞ்சு சாம்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேபோல் ஸ்டீவ் ஸ்மித்தும் முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்தார். இந்த இரண்டு போட்டிகளில் மட்டுமே ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

 

அதன்பின் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்விகளை தழுவியது. அந்த அணியில் ஸ்மித், சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஆகியோரில் இருவர் நன்றாக விளையாடினால் மட்டுமே மிகப்பெரிய ஸ்கோரை எட்ட முடியும் என்ற நிலை உள்ளது. இதுதான் அந்த அணிக்கு பின்னடைவாகும். ராகுல் டெவாட்டியா, ஆர்சர் கடைசி நேரத்தில் அணிக்கு கைக்கொடுக்கின்றனர். இதனால் தொடக்கம் சிறப்பாக அமைய வேண்டியது அவசியம்.

 

பந்து வீச்சில் ஆர்சர் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளார். இன்னும் அந்த அணி பந்து வீச்சில் சரியான காம்பினேசன் அணியை உருவாக்கவில்லை.

 

டெல்லி அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் மட்டுமே தோல்வியடைந்தது. அணிக்கு மிகப்பெரிய பலமே வேகப்பந்து வீச்சாளர்களான ரபடா, நோர்ஜே. இருவரும் பவுன்சர், ஸ்பேஸ், யார்க்கர் என அசத்துகிறார்கள்.

 

பேட்டிங்கை பொறுத்த வரைக்கும் பிரித்வி ஷா நல்ல தொடக்கம் கொடுக்கிறார். அதை ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஸ்டாய்னிஸ் ஆகியோர் அப்படியோ கொண்டு செல்கிறார்கள். தவான் மட்டும் நல்ல நிலைக்கு திரும்பிவிட்டால் பேட்டிங்கில் அசுர பலம் கிடைக்கும்.

 

ஒட்டு மொத்தத்தில் டெல்லிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் கடுமையாக போராட வேண்டியிருக்கும்.