
விராட் கோலி ஒன் மேன் ஷோ நிகழ்த்த சிஎஸ்கே-வுக்கு 170 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது ஆர்சிபி
டி வில்லியர்ஸ் டக்அவுட் ஆக, பிஞ்ச் ஏமாற்ற, விராட் கோலி அரைசதம் அடிக்க சென்னை அணிக்கு 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி.
விராட் கோலி
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு ஜெகதீசன் சேர்க்கப்பட்டார்.
தேவ்தத் படிக்கல், தீபக் சாஹர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தீபக் சாஹர் முதல் ஓவரை வீசினார். பந்தை அற்புதமாக ஸ்விங் செய்தார் தீபக் சாஹர். ஆரோன் பிஞ்ச் பந்து எங்கே வருகிறது என தேடும் நிலை ஏற்பட்டது. முதல் ஓவரில் 2 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
அடுத்த ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் தேவ்தத் படிக்கல் ஒரு பவுண்டரி அடித்தார். இதனால் சென்னை 9 ரன்கள் விட்டுக்கொடுத்தது. அடுத்த ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆரோன் பிஞ்ச் ஸ்டம்பை பறிகொடுத்தார். இந்த ஓவரில் 4 ரன்களே விட்டுக்கொடுத்தார்.
4-வது ஓவரின் சாம் கர்ரன் 6 ரன்களும், ஐந்தாவது ஓவரில் தீபக் சாஹர் 4 ரன்களும் விட்டுக்கொடுத்தனர். தீபக் சாஹர் பவர் பிளேயில் 3 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
அடுத்த ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விட்டுக்கொடுக்க ஆர்சிபி பவர் பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்திருந்தது.
7-வது ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரில் பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அடுத்த இரண்டு ஓவர்களில் 9 ரன்கள் விட்டுக்கொடுத்தது.
10-வது ஓவரை கரண் சர்மா வீசினார். இந்த ஓவரில் படிக்கல் ஒரு சிக்ஸ் விளாசினார். இதனால் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு ஆர்சிபி 65 ரன்கள் எடுத்தது.
11-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் படிக்கல் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. டி வில்லியர்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
ஒரு பக்கம் விக்கெட் இழந்தாலும் மறுபக்கம் விராட் கோலி நம்பிக்கையுடன் விளையாடினார். 15-வது ஓவரில் வாசிங்டன் சுந்தர் 10 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 15 ஓவர் முடிவில் ஆர்சிபி 95 ரன்கள் எடுத்திருந்தது.
16-வது ஓவரை கரண் சர்மா வீசினார். இந்த ஓவரில் ஆர்சிபி ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் சேர்த்தது. அத்துடன் 100 ரன்னைக் கடந்தது. 16 ஓவர் முடிவில் ஆர்சிபி 103 ரன்கள் எடுத்திருந்தது.
17-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரியுடன் ஆர்சிபி 14 ரன்கள் அடித்தது. கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி விராட் கோலி 39 பந்தில் அரைசதம் அடித்தார். ஆர்சிபி 117-4
18-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் மூன்று சிக்ஸ் விட்டுக்கொடுத்ததால், ஆர்சிபி 24 ரன்கள் விளாசியது. ஒரே ஓவரில் ஸ்கோர் 141 ஆக உயர்ந்தது.
19-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். 18.2 ஓவரில் ஆர்சிபி 150 ரன்னைத் தொட்டது. முதல் பந்தில் விராட் கோலி சிக்ஸ் அடித்தார். அடுத்த பந்தை நோ-பாலாக வீசினார். அதில் இரண்டு ரன் என மூன்று ரன்கள் கிடைத்தது. முதல் பந்தில் 9 ரன்கள் கொடுத்தாலும், அதன்பின் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த ஓவரில் ஆர்சிபி 14 ரன்கள் அடிக்க ஸ்கோர் 155 ஆனது.
கடைசி ஓவரை பிராவோ வீசினார். முதல் பந்தை விராட் கோலி பவுண்டரிக்கு விராட்டினார். அதன்பின் நான்கு பந்தில் நான்கு டபுள்ஸ் அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் அடிக்க ஆர்சிபி-க்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது.
இதனால் 20 ஓவர் முடிவில் 169 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 52 பந்தில் 90 ரன்கள் அடித்தும், ஷவம் டுபே 14 பந்தில் 22 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.