சிறைச்சாலையில் நேற்றிரவு ஆரம்பித்த பதற்ற நிலை இன்று காலை வரை நீடித்துள்ளது...!
மஹர சிறையில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் மரணித்த கைதிகளின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் றாகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த 50 இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக றாகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இவ்வாறு காயமடைந்துள்ளவர்களில் சிறைச்சாலையிலுள்ள இரண்டு சேவையாளர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாடோபுள்ளே தெரிவித்தார்.
மஹர சிறைச்சாலைக்குள் மூவாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் உள்ளதோடு அவர்களில் 2 கிலோகிராமுக்கும் அதிக
போதை பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களே இந்த குழப்பநிலையை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் நிலையில் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு வலியுறுத்தியும் தாங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்தும் அவர்கள் சில குற்றச்சாட்டுக்களை சிறைச்சாலை அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.
இந்தநிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சில கைதிகள் மஹர சிறைச்சாலையின் வைத்தியசாலையை நேற்று பிற்பகல் உடைத்து உள்ளே சென்றதோடு அங்குள்ள சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.
பின்னர் சிறைச்சாலையினுள் குழப்பநிலை ஏற்பட்டதோடு பதற்றநிலையும் உருவாகியது.
இதனையடுத்து கைதிகள் சிறைச்சாலையின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி, தீ வைத்ததாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தீயை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதோடு கம்பஹா தீயணைப்பு பிரிவின் வாகனங்களும் அனுப்பட்டது.
அத்துடன் கடற்படையினரின் தீயணைப்பு வாகனமும் மஹர சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்த மோதல் இன்று காலை வரை நீடித்தததாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
சிறைச்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 400 காவல்துறை உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட்டுள்ளதோடு விசேட அதிரடி படையின் 200 உறுப்பினர்கள் அனுப்பப்ட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.