அமேசான் காடழிப்பில் அதீத மாற்றம்

அமேசான் காடழிப்பில் அதீத மாற்றம்

பிரேஸிலில் மழைக்காடுகள் அழிக்கப்படுவது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாதளவிற்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டின் விண்வௌி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

11,088 சதுர கிலோமீற்றர் பரப்பளவான மழைக்காடுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டிலிருந்து இவ்வாண்டு ஜூலை வரையான ஒரு ஆண்டுக்குள் அழிக்கப்பட்டுள்ளன.

இது அதற்கு முன்னைய ஆண்டில் அழிக்கப்பட்டதை விட 9.5 வீத அதிகரிப்பாகும்.

2019 ஜனவரியில் ஜெயார் பொல்சொனாரோ பிரேஸிலின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமேசான் காடழிப்பு அதிகரித்த வீதத்தில் இடம்பெறுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசானில் விவசாய நடவடிக்கைகளையும் சுரங்க  செயற்பாடுகளையும் ஜனாதிபதி பொல்சொனாரோ ஊக்குவிப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

அமேசான் மழைக்காடுகளில் சுமார் 3 மில்லியன் தனித்துவம் வாய்ந்த தாவரங்களும் விலங்குகளும் காணப்படுவதுடன், ஒரு மில்லியன் பழங்குடி மக்களின் வாழ்விடமாக திகழ்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த தரவுகள் அடங்கிய பிரேஸில் விண்வௌி ஆய்வு நிலையத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை அடுத்தாண்டு ஆரம்பத்தில் வௌியிடப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.