
உடன் நிறுத்த வேண்டும் - ட்ரம்புக்கு எதிராக பலத்த கண்டனம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வன்முறையை தூண்டுவதாக குடியரசு கட்சியைச் சேர்ந்த ஜோர்ஜிய மாநில தேர்தல் அதிகாரி கப்ரியல் ஸ்ரேலிங் குற்றம் சாட்டியுள்ளார்.
மிகவும் காரசாரமான அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், அனைத்து விடயங்களும் வெகுதூரம் சென்றுவிட்டதாகவும் மோசடிக் குற்றச்சாட்டை டொனால்ட் ட்ரம்ப் நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக ஆதாரமற்ற தேர்தல் மோசடி குற்றச்சாட்டுக்களை ட்ரம்ப் முன்வைத்து வருவதாகவும் அதனால் ஏற்படும் வன்முறைகளுக்கு அவரே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் பிரசார தரப்பினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய ஜோர்ஜிய மாநிலத்தில் இரண்டாவது தடவையாகவும் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் மீள எண்ணப்பட்டு வருகின்றன.
ஜோர்ஜியாவில் ட்ரம்ப்பை விட சிறிய அளவான வாக்கு வித்தியாசத்தில் ஜனநாய கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றிருந்தார்.
சட்டரீதியாக வாக்குகள் அனைத்தும் எண்ணப்படுவதையும், சட்டரீதியற்ற வாக்குகள் நிராகரிக்கப்படுவதையும் மீள உறுதிப்படுத்தும் வகையில் வாக்குகளை மீள எண்ணுவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டதாக ட்ரம்பின் பிரசாரத்திற்கான பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ட்ரம்ப் தரப்பினர் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் குறித்து ஜோர்ஜிய மாநில குடியரசு கட்சி தேர்தல் அதிகாரியான கப்ரியல் ஸ்ரேலிங் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
எந்தவொருவரும் அச்சுறுத்தும் அல்லது வன்முறையை தூண்டும் செயற்பாடுகள் ஈடுபடக் கூடாது.
தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாக டொனால்ட் ட்ரம்ப் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரை எந்தவொரு ஆதாரங்களையும் நீதித் திணைக்களத்தால் கண்டறிய முடியவில்லை என்றார்.
இதேவேளை அடிப்படை அற்ற வலதுசாரி சதி கோட்பாடுகளை நம்புகின்றவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், தமது வீட்டிற்கு வெளியிலும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் ஜோர்ஜிய மாநில செயலாளரின் மனைவிக்கும் தொலைபேசி ஊடாக பாலியல் ரீதியான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கப்ரியல் ஸ்ரேலிங் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு அதிபர் மற்றும் செனட் சபை உறுப்பினர்கள் என எவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.