அமெரிக்க சுகாதார மந்திரியாக சேவியர் பெக்கெரா நியமனம் - ஜோ பைடன் இன்று அறிவிக்கிறார்

அமெரிக்காவின் புதிய சுகாதார மந்திரியாக அட்டர்னி ஜெனரல் சேவியர் பெக்கெராவை நியமிக்க ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி பதவியேற்கிறார்.

 


இதனிடையே தனது தலைமையில் அமையும் மந்திரி சபையில் இடம் பெறும் நபர்களை ஜோ பைடன் அறிவித்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவின் புதிய சுகாதார மந்திரியாக கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் சேவியர் பெக்கெராவை நியமிக்க ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரது நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் அவசியம் ஆகும். அப்படி ஒருவேளை செனட் சபை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அமெரிக்க சுகாதார மந்திரியாக இணைக்கப்படும் முதல் லத்தீன் அமெரிக்கர் என்கிற பெருமையை சேவியர் பெக்கெரா பெறுவார். 62 வயதான சேவியர் பெக்கெரா, கடந்த 2016-ம் ஆண்டு கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்காவை ஆட்டி படைத்து வரும் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் சுகாதாரத்துறையை வழி நடத்தும் சவாலான பணியை சேவியர் பெக்கெரா ஏற்க உள்ளார். சேவியர் பெக்கெரா நியமனம் குறித்து ஜோ பைடன் இன்று (செவ்வாய்க்கிழமை) முறைப்படி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கியை அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களின் தலைவராக நியமிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.