அயர்லாந்து பயணி, விலை உயர்ந்த பொருட்களுடன் தவறவிட்ட பை- பத்திரமாக ஒப்படைத்த இந்திய டாக்சி டிரைவர்

அயர்லாந்து பயணி, விலை உயர்ந்த பொருட்களுடன் தவறவிட்ட பையை பத்திரமாக ஒப்படைத்த இந்திய டாக்சி டிரைவரின் நேர்மைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

துபாய் கடற்கரை குடியிருப்பு பகுதியில் ஆலன் கார்ட்னர் (வயது 45) என்ற வடக்கு அயர்லாந்து நாட்டு தொழிலதிபர் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் இயக்கப்படும் டாக்சியில் பயணம் செய்தார். அந்த டாக்சியை இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரோஸ் (38) என்ற டிரைவர் ஓட்டி சென்றார். அந்த தொழிலதிபர் குறிப்பிட்ட ஓட்டலில் இறக்கி விட்டு வரும் வழியில் அவர் பையை தவற விட்டு இருப்பதை கண்டுபிடித்தார்.

 


அந்த பையில் விலை உயர்ந்த கைக்கெடிகாரம், ஆயிரக்கணக்கான திர்ஹாம் நோட்டுகள், ஐபேட், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளது. அதில் ஏதேனும் முகவரி உள்ளதா? என பிரோஸ் தேடி பார்த்தபோது உள்ளே ஒரு டைரி இருந்துள்ளது. அந்த டைரியில் உள்ள இங்கிலாந்து நாட்டு எண்ணில் ஆலனை தொடர்பு கொண்டார். பின்னர், அந்த பையுடன் குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்றார்.

அவரிடம் அனைத்தையும் இந்திய டிரைவர் முறைப்படி ஒப்படைத்தார். இதற்கு ஆலன் அளித்த அன்பளிப்பையும் ஏற்க மறுத்தார். அப்போது அயர்லாந்து தொழில் அதிபர் ஆலன் கூறும்போது, “இதுபோன்ற நேர்மையான மனிதர்களை எனது வாழ்க்கையில் மிக அரிதாகவே பார்த்திருக்கிறேன். சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்திற்கு இவர் ஒரு சொத்து” என தெரிவித்தார்.

இந்த இந்திய டிரைவரின் நேர்மையான செயலுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.