இந்தியாவில் ஒரு கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு... இதுவரை 95.20 லட்சம் பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் ஒரு கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு... இதுவரை 95.20 லட்சம் பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது புதிய பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. உயிரிழப்பும் குறைந்துவருகிறது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

 

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்குகிறது. மொத்த பாதிப்பு 99,79,447 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 22,889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 338 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,44,789 ஆக உயர்ந்துள்ளது. 

 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,20,827 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 31,087 பேர் குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

 

 

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,13,831 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.45 சதவீதமாக நீடிக்கிறது. குணமடையும் விகிதம் 95.40 சதவீதமாக உயர்ந்துள்ளது.