6 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது- இந்தியா கொரோனா அப்டேட்ஸ்

இந்தியாவில் கொரோனா வைரசால் ஒரு கோடியே ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 97.61 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில தினங்களாக தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 25 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

 

இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,01,87,850 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,732 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு குறைந்த அளவிலான புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. புதிய பாதிப்புகளை பொருத்தவரை கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் பதிவாகி உள்ளது.

 

 

நேற்று ஒரே நாளில் 279 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,47,622 ஆக உயர்ந்துள்ளது. 

 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,61,538 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 21,430 பேர் குணமடைந்துள்ளனர்.

 

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,78,690 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மொத்த உயிரிழப்பு 1.45 சதவீதமாக நீடிக்கிறது. குணமடையும் விகிதம் 95.82 சதவீதமாக உயர்ந்துள்ளது.