
கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்துள்ள சசிகலா இன்று விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27-ந்தேதி விடுதலையானார்.
அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்த காரணத்தால் அங்கிருந்து பெங்களூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது கொரோனா பரிசோதனை செய்ததில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதனால் விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதன் காரணமாக சிறைத்துறை சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் 27-ந்தேதி நேரடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சசிகலாவை விடுதலை செய்ததற்கான ஆவணங்களை வழங்கினார்கள்.
சசிகலா விடுதலையானாலும் கொரோனா தொற்று காரணமாக அதே ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சசிகலா கொரோனா பாதிப்பில் இருந்து தற்போது முழுமையாக குணம் அடைந்தார். இதனால் விக்டோரியா ஆஸ்பத்திரியில் இருந்து இன்று சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அவரை சசிகலாவின் சகோதரர் திவாகரன், அ.ம.மு.க. பொதுச்செயலா ளர் டி.டி.வி. தினகரன், இளவரசி மகன் விவேக், திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் அழைத்து சென்றனர்.
சசிகலாவை பார்ப்பதற்காக ஏராளமான கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டிருந்தனர். அவர்களை பார்த்து சசிகலா கையசைத்தபடி சென்றார்.
சசிகலா கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணம் அடைந்தாலும் 1 வாரம் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
இதன் காரணமாக பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டில் சசிகலா தங்கி உள்ளார். அங்கு அவர் 1 வாரம் ஓய்வு எடுப்பார் என தெரிகிறது.
சசிகலாவுடன் சிறைக்கு சென்றிருந்த இளவரசி வருகிற 5-ந்தேதி விடுதலையாக உள்ளார். எனவே இளவரசி விடுதலையானதும் அவருடன் சேர்ந்து சசிகலா சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அநேகமாக 7-ந் தேதி சசிகலா சென்னை வருவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
சசிகலா சென்னை வரும் போது வழி நெடுக அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அ.ம.மு.க.வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அ.ம.மு.க. நிர்வாகிகள் கார், வேன்களில் வருவதற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சசிகலா வந்த பிறகுதான் அவரது அரசியல் நடவடிக்கைகள் என்ன என்பது தெரிய வரும்.