15 வருடங்களாக இந்தியாவில் பதுங்கியிருந்த இலங்கைத் தமிழர் சென்னை விமான நிலையத்தில் கைது

15 வருடங்களாக இந்தியாவில் பதுங்கியிருந்த இலங்கைத் தமிழர் சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர், அந்த நாட்டு கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி பயணிக்கவிருந்த விமானத்தில் பயணம் செய்ய தயாராக இருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்திற்கு வருகை தந்த ஐவர் அடங்கிய விசேட கியூ பிரிவு பொலிஸார், குறித்த நபரிடம் சிறிது நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர், அவரை பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இலங்கையைச் சேர்ந்த 45 வயதான ஆதிமூலம் மணி என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் 15 வருடங்களுக்கு மேலாக சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அறிய முடிகின்றது.

பல்வேறு பாரிய குற்றச்செயல்களுடன் குறித்த நபருக்கு தொடர்புள்ளதாகவும் தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபருடன் வருகைதந்த மற்றுமொரு நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.