
இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் நால்வரின் உயிரிழப்பு தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கடும் கண்டனம்...!
இலங்கை கடற்பரப்பில் இந்தியாவைச் சேர்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு, கடுமையான கண்டனத்தை தெரிவித்திருப்பதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மாநிலங்கள் அவையில் வைத்து தெரிவித்தார்.
அண்மையில் நெடுந்தீவுக்கு அருகில் இந்திய மீனவர்கள் படகொன்று, இலங்கை கடற்படைப் படகுடன் மோதிய நிலையில் தமிழகத்தில் ஏதிலியாக வசித்துவந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 4 பேர் மரணித்தனர்.
இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய அவர், இந்த விடயம் தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கும், இந்தியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகரத்துக்கும் இந்தியா தமது கண்டனத்தை தெரியப்படுத்தியது.
அதேநேரம் இதுதொடர்பான விசாரணைக்கும் உத்தரவிட்டிருப்பதுடன், விசாரணையின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தற்போது இலங்கையில் இந்திய மீனவர்கள் யாரும் தடுப்பில் இல்லை என்றும், இலங்கையில் தற்போது நங்கூரமிடப்பட்டிருக்கின்ற 62 இந்திய மீன்பிடி படகுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மொத்தமாக இலங்கையில் 173 மீன்பிடிபடகுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 36 மாத்திரமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தன.
எஞ்சியவற்றை ஏலத்தில் விடுவதற்கான யோசனை பரிசீலிக்கப்படுவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.