அமெரிக்க - சீன உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவானதன் பின்னர், முதன் முறையாக அமெரிக்க மற்றும் சீன உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை அலஸ்காவில் இன்று இடம்பெறுகின்றது.
இரு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள், பரஸ்பரம் கடுமையான வாதப்பிரதிவாங்களுடன், குற்றஞ்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஏனைய நாடுகள், சீனாவிற்கு எதிராக செயல்படும் வகையில், அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சீனா பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேநேரம், சின்ஜியாங்கில் (Xinjiang) உய்குர் (Uighur) முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கை, ஹொங்கொங் - தாய்வான் விடயங்களில் அவசியமற்ற தலையீடு போன்ற சீனாவின் செயல்பாடுகளை அமெரிக்கா கண்டித்துள்ளது.
அத்துடன், அமெரிக்காவிற்கு எதிராக இணையவழி தாக்குதல் மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எதிராக பிரயோகிக்கப்படும் பொருளாதார செயல்பாடுகள் குறித்தும் அமெரிக்கா பிரதிநிதிகள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்
உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் அமெரிக்க தரப்பில் இராஜாங்க செயலர் அன்ரனி பிளிங்கென் (Antony Blinken) மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சுலிவன் (Jake Sullivan) ஆகியோர் பங்குகொண்டனர்.
சீன அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட வெளிவிவகாரத்துறை அதிகாரி யங் ஜீச்சி (Yang Jiechi) மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வெங் யீ (Wang Yi) ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்குகொண்டனர்.
சீன மற்றும் அமெரிக்க தரப்பினர் தொடர்ந்தும் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை தொடரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன