அமெரிக்காவில் மற்றுமொரு துப்பாக்கிசூடு - பொலிஸ் அதிகாரி உட்பட 10 பேர் பலி
அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
கொலராடோ மாகாணத்தில் போல்டர் பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியுடன் புகுந்து அங்கிருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் பலர் காயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி எரீக்டேலி என்பவர் உயிரிழந்தார்.
பின்னர் அந்த இனந்தெரியாத நபரை மடக்கி பிடித்து கைது செய்தார்கள். அப்போது அந்த நபர் இரத்த காயத்துடன் காணப்பட்டார். அத்துடன் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் 9 பேர் பலியானார்கள்.
இனந்தெரியாத நபர் துப்பாக்கி சூட்டை ஏன் நடத்தினார்? என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இதேவேளை கடந்த வாரம் ஜோர்ஜியா மாகாணம் அட்லாண்டாவில் உள்ள மூன்று மசாஜ் பார்லர்களில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 ஆசிய பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.