சுயெஸ் கால்வாயில் தரைதட்டியுள்ள கப்பலால் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு (காணொளி)

சுயெஸ் கால்வாயில் தரைதட்டியுள்ள கப்பலால் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு (காணொளி)

சுயெஸ் கால்வாயில் தரைதட்டியுள்ள கொள்கலன் அடங்கிய கப்பல் காரணமாக மசகு எண்ணெய் போக்குவரத்து தடைப்பட்டதால் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 64 டொலர்களாகவும், அமெரிக்க டபிள்யூ. டி. ஐ எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 61 டொலர்களை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுயெஸ் கால்வாயில் தரைதட்டியுள்ள கொள்கலன் அடங்கிய கப்பல் இலங்கையை கடக்கவிருந்த போது, கொழும்பு துறைமுகத்திற்கு வந்து செல்லவிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தயா ரத்நாயக்கவை எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவிய போது, அந்த காலப்பகுதியில் எவர்கிவன் கப்பல் இலங்கைக்கு வருகைத்தரவில்லை என குறிப்பிட்டார்.

இந்தநிலையில் எகிப்திய சுயெஸ் கால்வாயில் சிக்கியுள்ள பாரிய கொள்கலன் தாங்கிகள் கொண்ட கப்பலை அகற்றும் முயற்சிகள் தொடருகின்றன.

தரைதட்டியுள்ள கப்பலினை மிதக்க வைக்கும் நோக்கில் நேற்று 20 ஆயிரம் டன் நிறையான மண் கப்பலின் அடிப்பாகத்தில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீர்பரப்பில் ஏற்பட்ட நீர்மட்ட உயர்வு மற்றும் தளம்பல் காரணமாக மீட்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், மீட்பு பணிகள் தற்போது மீள இடம்பெறுவதாக என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட இந்த அனர்த்தத்திற்குப் பின்னர் 300 இற்கும் மேற்பட்ட கப்பல்கள் கால்வாய்க்கு இரு பக்கத்திலும் நங்கூரமிட்டுள்ளன.

அத்துடன், இவற்றில் சில கப்பல்கள் விலங்குகளையும் கொண்டு செல்கின்றதுடன், மேலும் காலதாமதம் ஏற்பட்டால் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில கப்பல்கள் ஆபிரிக்காவை சுற்றி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளன.

பிந்திக் கிடைக்கப்பெற்ற செய்திகளுக்கு அமைய கப்பலின் அடிப்பாகத்தில் சிறிய அளவிலான நீர் ஓட்டம் இடம்பெறுவதாக சுயெஸ் கால்வாய் அதிகார சபையின் தலைவர் ஜென்ரல் ஒஸ்மா ரேபி  தெரிவித்துள்ளார்.

ஆகவே, கப்பலின் நிறையை குறைக்கும் நோக்கில் கொள்கலன்களை இறக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர குறிப்பிட்டுள்ளார்