சீன தடுப்பூசியை போட்ட இருதினங்களில் பாகிஸ்தான் ஜனாதிபதிக்கும் தொற்றியது கொரோனா
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆரிப் ஆல்வியும் அவரது மனைவி சாமினா ஆல்வியும் சீன தயாரிப்பான சினோபார்ம் என்ற கொரோனா தடுப்பூசியை இருதினங்களுக்கு முன்பு எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளதை ஜனாதிபதி ஆரிப் ஆல்வி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப் படுத்தியுள்ளார். அதில், எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துள்ளேன். ஆனால் இரண்டாவது டோஸ் எடுத்தபிறகுதான் அன்டிபாடிகள் உடலில் அதிகரிக்கத் தொடங்கும். எனவே அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர், அதிபர் ஆகியோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட பிறகு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.