திறந்த பல்கலைக்கழகத்தின் புதிய கல்வி ஆண்டு கற்கை நெறி கட்டணங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு

திறந்த பல்கலைக்கழகத்தின் புதிய கல்வி ஆண்டு கற்கை நெறி கட்டணங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு

திறந்த பல்கலைக்கழகத்தின் புதிய கல்வி ஆண்டு கற்கை நெறிகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அதன் தலைவர் ஹர்ஷ மதுசங்க, எமது செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்டபோது, இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

திறந்த பல்கலைக்கழகத்திற்கு, அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒதுக்கீடுகளின் ஒரு தொகுதி குறைக்கப்பட்டமை காரணமாக, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் பல்கலைக்கழகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கிடப்படுவதில்லை என திறந்த பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வேதனம் வழங்க மாதம் 50 மில்லியன் ரூபா தேவை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊழியர்களின் வேதனத்தைக் குறைத்தல், மேலதிக கொடுப்பனவுகளை இரத்துச் செய்தல் மற்றும் மாணவர்களுக்கான கற்கை நெறிகளுக்கான கட்டணத்தை அதிகரித்தல் என்பனவற்றின் ஊடாக அந்தப் பணத்தை அறிவிட்டுக்கொள்வதற்கான தீர்வாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கற்கை நெறிகளுக்கான கட்டணங்கள், நூற்றுக்கு 10 வீதத்திற்கும் அதிகளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் தலைவர் ஹர்ஷ மதுசங்க குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், எமது செய்திச் சேவை, திறந்த பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.ஏ. ஆரியதொரையிடம் வினவியது.

இதன்போது பதிலளித்த அவர், “கடந்த ஆண்டு மாதம் ஒன்றுக்கு 140 மில்லியன் ரூபா கிடைத்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 190 மில்லியன் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், நிரந்தர உத்தியோகத்தர்களின் வேதனம் மாத்திரமே கிடைக்கிறது. ஏனையவை, மாணவர்களின் பிரத்தியேக வகுப்பு கட்டணம் மற்றும் செயற்பாட்டு நிதி என்பனவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், “ஆண்டுதோறும், நூற்றுக்கு 10 வீதமளவில் கட்டணம் அதிகரிக்கப்படும். ஆனால், கொவிட் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு கட்டண அதிரிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை. இந்த ஆண்டும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூற முடியாது. ஏனெனில், இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளவில்லை” எனவும் தெரிவித்தார்