பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2021 - 2022 ரிஷப ராசி நேயர்களே!

ரிஷப ராசி நேயர்களே!

சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்

(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)

ரிஷப ராசி நேயர்களே!

10-ம் இடத்தில் குருவோடும், விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்ரன், சந்திரன் ஆகியவற்றின் சஞ்சாரத்தோடும், புதிய ‘பிலவ’ தமிழ் புத்தாண்டு பிறக்கின்றது. தா்ம கர்மாதிபதி யோகத்தைக் கொடுக்கும் சனி, பாக்கிய ஸ்தானத்தில் பலம்பெற்றுச் சஞ்சரிக்கின்றார். அப்புறமென்ன கவலை?, வெற்றிக்கொடி பறக்கப் போகும் இந்த ஆண்டில், வியக்கவைக்கும் தகவல்கள் ஏராளமாக உங்களை வந்தடையப் போகின்றது. தடுமாற்றங்கள் அகலும். நிலைமை சீராகி நிம்மதி கொடுக்கும்.

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், செவ்வாய் வீட்டில் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கின்றார். பூமிகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் பரிவா்த்தனை யோகம் பெறுவதால், பூமி வாங்கும் யோகம் உண்டு. கடந்த சில வருடங்களாகவே ‘இடம் வாங்க முடியவில்லையே?’ என்ற குழப்பத்தில் இருந்தவர்களுக்கு இப்பொழுது காலம் கனியப் போகின்றது. வருடத் தொடக்கத்திலேயே, யோக பலம் பெற்ற நாளில் உங்கள் ஜாதகத்திற்கு சகல பாக்கியங்களையும் வழங்கும் தெய்வத்தைக் கண்டறிந்து வணங்குங்கள்.

புத - ஆதித்ய யோகம், புத -சுக்ர யோகம் ஆகிய இரண்டு யோகங்களும், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே உருவாகின்றது. மகர குருவின் சஞ்சார காலத்தில் நீச்ச குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகின்றது. உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகமாக விளங்கும் குருபகவான் நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வையால் கிடைக்கும் பலன்கள் மிகுந்த நன்மை தருவதாக அமையும். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆதாயம் தரும் தகவல்கள் வாழ்க்கைத் துணை வழியே வரலாம். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடமையை சரிவரச் செய்து நிலைமையை சீராக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.

குருவின் வக்ர இயக்கம்

ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். அதோடு 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். மீண்டும் 14.9.2021 முதல் 12.10.2021 வரை, மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்.

உங்கள் ராசியைப் பொறுத்தவரை 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு பகவான். அஷ்டமாதிபதி நீச்சம் பெறுவது யோகம்தான். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகமாக விளங்கும் குருபகவான் வக்ரம் பெறும்பொழுது அதிகபட்சமான நன்மைகள் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி பிரமிக்கதக்கதாக இருக்கலாம். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.

குருப்பெயா்ச்சி காலம்

ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குரு பகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, அதன் பிறகு 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன் பிறகு மீண்டும் 13.4.2022-ல் மீன ராசிக்கு பெயா்ச்சியாகிச் செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. குரு பார்வை 2-ம் இடத்தில் பதிவதால், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொடிகட்டிப் பறந்த பிரச்சினைகள் படிப்படியாக மாறும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஆதாயம் தரும் தகவல் வந்துசேரும். புகழ்மிக்கவர்களின் தொடர்பால் சில காரியங்கள் முடிவடையும்.

குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் எதிரிகள் உதிரியாவர். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள், அதுவாகவே விலக்கப்படும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். வெளிநாட்டில் இருந்து அனுகூலமான தகவல் கிடைக்கும். பணியாளர்கள் தொல்லை அகலும்.

ராகு-கேது பெயா்ச்சி காலம்

21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 12-ம் இடத்தில் ராகுவும், 6-ம் இடத்தில் கேதுவும் வரப்போகிறார்கள். 12-ம் இடம் என்பது விரய ஸ்தானம். எனவே, விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். 6-ல் கேது இருப்பதால் உத்தியோகத்தில் சில பிரச்சினைகள் உருவாகலாம். சா்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்வதன் மூலம் தடைகள் அகன்று தக்க பலன் கிடைக்கும்.

சனியின் வக்ர காலம்

12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனிபகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனிபகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எனவே இக்காலத்தில் கொஞ்சம் விழிப்புணா்வோடு செயல்பட வேண்டும். உறவினா் பகை உருவாகலாம்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 2.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய் - சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் பகைக் கிரகங்களின் பார்வை இருப்பதால், எதையும் திட்டவட்டமாகச் செய்ய இயலாது. எதிரிகளின் பலம் மேலோங்கி இருக்கும். எவ்வளவு விழிப்புணர்ச்சியோடு இருந்தாலும் விரயங்கள் அதிகரிக்கத்தான் செய்யும். ‘வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லையே’ என்று ஆதங்கப்படுவதோடு, சொத்துக்களை விற்கவும் நேரிடும். மருத்துவச் செலவுகளும், மனக்கலக்கங்களும் உருவாகும்.

பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு சுபச்செலவுகளை உருவாக்கும் ஆண்டாகும். உடல்நலனில் ஒவ்வாமை நோய் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். 10-ல் குரு இருப்பதால் பதவி மாற்றங்கள், இடமாற்றங்கள் உருவாகலாம். கணவன் - மனைவிக்குள் அன்பும், ஆதரவும் பெருகும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு, பிரபலமானவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சனி-செவ்வாய் பார்வை காலத்தில் விரயங்கள் அதிகரிக்கும். பிறரை நம்பிச் செயல்படுவது இயலாது. வெள்ளிக்கிழமை தோறும் அம்பிகையை வழிபடுங்கள்.

வளா்ச்சி தரும் வழிபாடு
பிரதோஷ விரதமிருந்து நந்தீஸ்வரர் வழிபாட்டை மேற்கொள்வதோடு, வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரரை யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வந்தால் யோகங்கள் படிப்படியாக வந்து சேரும். நினைத்தது நிறைவேறி நிம்மதி கிடைக்கும்.