மார்ச் மாதம் முதல் கொரோனா மீண்டும் தாக்கத்தொடங்கியது ஏன்? - ஆய்வு முடிவு அம்பலப்படுத்துகிறது

மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று இந்தியாவில் மீண்டும் தாக்கத்தொடங்கியது ஏன் என்பதை சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பு நடத்திய செரோ ஆய்வு முடிவு அம்பலப்படுத்துகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சம் தொட்டது. அக்டோபர் மாதம் தொற்று பரவல் குறையத்தொடங்கியது.

 


ஆனால் இப்போது கடந்த மார்ச் மாதம் இதன் இரண்டாவது அலை வந்து எழுச்சி பெறத்தொடங்கி உள்ளது. தற்போது தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் பின்னணிதான் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையொட்டி சி.எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்படுகிற அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் செரோ சர்வே நடத்தியது. செரோ சர்வேயில், கோவிட் சுவாச் எலிசா உபகரணம் மூலம் ஒருவருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்ததா என்பதை, அவர்களது உடலில் உருவாகியுள்ள நோய் எதிர்ப்பு பொருள் (ஆன்டிபாடிஸ்) மூலம் அறியலாம்.

 

சுப்ரீம் கோர்ட்

 

 

இந்த செரோ சர்வேயை சி.எஸ்.ஐ.ஆர். தனது 40 ஆய்வகங்களில் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தக்கூடிய பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என 17 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் எடுத்துள்ளது. 10 ஆயிரத்து 427 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

செரோ சர்வேயில் 10 ஆயிரத்து 427 பேரில் பாதிப்பு விகித சராசரி 10.14 சதவீதம் என தெரிய வந்துள்ளது. கடந்த செப்டம்பரில் கொரோனா தொற்று குறைவதற்கு காரணம் இதுதான் என கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, அதனால் உருவாகக்கூடிய நோய் எதிர்ப்புப்பொருளானது 5 அல்லது 6 மாதங்களுக்கு உடலில் தங்கி இருக்கும். அது கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும்.

5 அல்லது 5 மாதங்களுக்கு பிறகு நோய் எதிர்ப்பு பொருள் கணிசமாக குறைந்து விடுகிறபோது மக்கள் மீண்டும் தொற்றுக்கு இலக்காகிறார்கள்.

இந்த செரோ சர்வேயில், 5 அல்லது 6 மாதங்களுக்கு பிறகு ஏறத்தாழ 20 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு பொருள் செயல்பாடு இல்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே இதன் காரணமாகத்தான் மார்ச் மாதம் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று தாக்குதல் தொடங்கி இருக்கலாம் என்று ஆய்வினை நடத்தியவர்களில் ஒருவரான சாந்தனு செங்குப்தா கூறி உள்ளார்