மன்னார் மாவட்டத்தில் கடும் காற்றினால் 59 பேர் பாதிப்பு: 13 வீடுகள் சேதம்! (படங்கள்)

மன்னார் மாவட்டத்தில் கடும் காற்றினால் 59 பேர் பாதிப்பு: 13 வீடுகள் சேதம்! (படங்கள்)

மன்னார் மாவட்டத்தில் நேற்று (25) கடும் காற்றின் காரணமாக 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் பாதிப்படைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனார்த்த  முகாமைத்துவ உதவி பணிப்பாளர் கணகரட்னம் திலீபன் தெரிவித்தார்.

மேலும் இம் மாவட்டத்தில் 13 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2 சிறிய கடைகளும் சேதமடைந்துள்ளன. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 5 வீடுகளும், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 5 வீடுகளும், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 2 வீடுகளும், மடு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு  வீடும் சேதமடைந்துள்ளன.

மேலும் மன்னார் எருக்கலம்பிட்டி மற்றும் கொக்குப்படையான் கிராமத்தில் தலா ஒவ்வொரு கடைகள் சேதமடைந்துள்ளதாக  மன்னார் மாவட்ட அனார்த்த  முகாமைத்துவ உதவி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரியமடு கிராமத்தில் 3 ஏக்கர் பப்பாசி செய்கையும், தேவன் பிட்டி, வெள்ளாங்குளம்  பகுதியில் 5 ஏக்கர் வாழைத்தோட்டமும் இவ்வாறு கடும் காற்றினால் சேதமடைந்துள்ளன.

மேலதிக நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட அனர்த்த  முகாமைத்துவ பிரிவு மேற்கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் உள்ள பல மீனவக் கிராமங்களில் நேற்று மாலை கடல் நீர் உட்புகுந்ததால் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதோடு, மீனவர்களின் மீன்வாடிகளும் சேதமாகின.

No description available.
No description available.
No description available.