ஆடுகளத்தில் முழந்தாளிடுவதை நிராகாித்த குயின்டன் டி கொக் இன்று மண்டியிட்டார்

ஆடுகளத்தில் முழந்தாளிடுவதை நிராகாித்த குயின்டன் டி கொக் இன்று மண்டியிட்டார்

இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக தென் ஆபிரிக்க அணியின் விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் சக வீரர்களுடன் இணைந்து, நிற வெறிக்கு எதிராக முழந்தாளிட்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் உலக கிண்ணப்போட்டியில்நிற வெறிக்கு எதிராக வீரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்காக போட்டி தொடங்குவதற்கு முன், மைதானத்தில் முழந்தாளிட்டு சபதம் ஏற்கின்றனர்.

அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென் ஆபிரிக்க வீரர்கள் மைதானத்தில் முழந்தாளிட்டு அமர்ந்தனர். ஆனால் விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் மட்டும் இடுப்பில் கைவைத்து நின்றார்.

பின்னர்,  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டிதொடங்குவதற்கு முன்னதாக,  அனைவரும் மண்டியிட வேண்டும் என தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை தமது வீரர்களிடம் தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த குயின்டன், போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.

இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், "ரசிகர்களிடமும்,  சகவீரர்களிடமும் முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நிற வெறிக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்பதன் முக்கியத்துவம் புரியும். முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பொறுப்பு வீரர்களுக்கு இருக்கிறது.

நான் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு சபதம் ஏற்பது மற்றவர்களுக்கு பாடமாக அமைந்தால், மற்றவர்கள் சிறப்பாக வாழ உதவினால், அதை விட மகிழ்ச்சியானது வேறொன்றும் இல்லை.

நான் நிற வெறி பிடித்தவன் இல்லை. என்னை நன்கு அறிந்தவர்களுக்கு இது தெரியும். என்னை ‘நிற வெறியன்’ என்று அழைத்த போது வேதனை அளித்தது.

என் குடும்பத்திலும் கறுப்பினத்தவர் உள்ளனர். இந்த விடயத்தில் எனக்கு ஆதரவு அளித்த அணித்தலைவர் பவுமாவுக்கு நன்றி. இனிவரும் போட்டிகளில் நான் விளையாடுவேன்"  என குயின்டன் டி கொக் கூறினார்.