டி20 உலகக் கோப்பை- நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை- நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், நமீபியா அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர்கள் ஹஸ்ரத்துல்லா 33 ரன்களும், முகமது ஷாஜத் 45 ரன்களும் சேர்த்தனர். அஸ்கர் 13 ரன்கள், கேப்டன் முகமது நபி 32 ரன்கள் அடித்தனர்.

 

இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி  என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 56 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகள் சரிந்தன. முன்வரிசை வீரர்கள் சோபிக்காத நிலையில், டேவிட் வீஸ் நிதானமாக விளையாடினார். அணியை சரிவில் இருந்து மீட்க போராடிய அவர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற, நமீபியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களே எடுத்தது. இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. 

 

 

நவீன் உல் ஹக், ஹமித் ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி குரூப்-2 புள்ளி பட்டியலில்  2ம் இடத்தில் நீடிக்கிறது.