பாணந்துறை துப்பாக்கி பிரயோகம்: பிரதான சந்தேக நபர் ஹெரோயினுடன் கைது
பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் நோயாளர் காவு வண்டியின் சாரதி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 27 ஆம் திகதி பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் குறித்த துப்பாக்கி பிரயோகம் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தனியார் வைத்தியசாலையிலிருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு பாணந்துறை வைத்தியசாலைக்கு சென்ற குறித்த நோயாளர் காவு வண்டியை நுழைவாயிலில் இரு உந்துருளிகளில் வந்து மூன்று சந்தேகநபர்கள் வழிமறித்திருந்தனர்.
அதன்போது, அவர்களில் ஒருவர் குறித்த நோயாளர் காவு வண்டியின் சாரதியை இலக்கு வைத்து துப்பாக்கி் பிரயோகம் மேற்கொண்டிருந்தார். எனினும், அவ்வேளையில் துப்பாக்கி இயங்காமல் போனதால் சாரதி உயிர்த் தப்பினார்.
இதனையடுத்து சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றிருந்தனர். இந்நி்லையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளில் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த நோயாளர் காவு வண்டியின் சாரதியும் தற்போது கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.