தமிழகத்துக்கு படகு மூலம் தப்பிச் சென்ற இளைஞர் கைது!

தமிழகத்துக்கு படகு மூலம் தப்பிச் சென்ற இளைஞர் கைது!

இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்திற்கு தப்பிச் சென்ற இளைஞர் ஒருவர் தேவிப்பட்டினம் கடலோர காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தியா - இராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் அருகே உள்ள கடற்கரை கிராமத்தில் கடந்த மாதம் 11ஆம் திகதி நள்ளிரவில் இலங்கையைச் சேர்ந்த படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இதையடுத்து, குறித்த படகு மூலம் எவரேனும் தமிழகத்திற்கு தப்பிவந்துள்ளனரா? என்பது தொடர்பில், தேவிப்பட்டினம் கடலோர காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தநிலையில், சேலம் பகுதியில் வைத்து, இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர், கிளிநொச்சி - கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையால், கடந்த மாதம் 10ஆம் திகதி இலங்கையிலிருந்து படகுமூலம் புறப்பட்ட அவர் 11 ஆம் திகதி நள்ளிரவு தமிழகத்தை சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட அவரை, தேவிப்பட்டினம் காவல்துறையில் ஒப்படைக்க கடலோர காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் பிரவேசித்ததாக தெரிவித்து அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தப்பட்டு வருதாக தெரிவிக்கப்படுகிறது.