ரணிலை பிரதமராக்கும் தீர்மானத்துக்கு ஓமல்பே சோபித்த தேரர், பேராயர் மெல்கல் ரஞ்சித் கடும் எதிர்ப்பு
ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் பிரதமராக நியமிப்பதற்கு மிகவும் மரியாதைக்குரிய மதகுருமார்களான வண. ஓமல்பே சோபித தேரர் மற்றும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் நிபந்தனையற்ற எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
வண. ஓமல்பே சோபித தேரர் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், வெற்றிடமாக உள்ள பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கவிருப்பது, ‘அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் நெறிமுறைகளுக்கு மாறானது’ என்றார்.
அவர் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு பொருத்தமானவர் அல்ல எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஒன்று கேட்கிறார்கள், ஆனால் முற்றிலும் மாறுபட்ட ஒன்று வழங்கப்படுகிறது என்று கூறிய தேரர், புதிய அரசாங்கத்தை நியமிப்பது தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் தெளிவான உத்தரவை வழங்கியுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்கவின் நியமனம், இந்த உத்தரவை நேரடியாக புறக்கணிப்பதாகவே கருதப்படும் என்றார்.
ரணில் விக்ரமசிங்க மக்களின் இதயங்களை வென்ற தலைவர் அல்ல என்பது முழு நாடும் அறிந்ததே என தேரர் மேலும் தெரிவித்தார்.
அவர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர், மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் தலைவர் அல்ல என்றும், மக்கள் தலைவராக வேண்டும் என்பதற்காக அல்ல, வேறு சில தனிப்பட்ட காரணங்களுக்காகவே ரணில் நியமிக்கப்படுகிறார்.
இது ராஜபக்ஷக்களின் ஏகபோக பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் தீர்மானம் என தேரர் தெரிவித்துள்ளார்.
சில சமயங்களில் வலுக்கட்டாயமாகவோ அல்லது பணத்தை வழங்குவதன் மூலமாகவோ மற்ற கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரித்து ஒருவருக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்ததாக கூறப்படும் முடிவு குறித்து பேராயர் கொழும்பில் செய்தியாளர்களிடம் அதிருப்தி வெளியிட்டார்.
"ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் ஒரு பிரதிநிதி மாத்திரமே ஆவார்.
அவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டவர் அல்ல. இந்த நியமனம் சட்டபூர்வமானது அல்ல, தற்போது இந்த நாட்டில் உள்ள மக்கள் விரும்பும் தீர்வு இதுவல்ல” என்று அவர் கூறினார்.
அரசியலில் தோற்கடிக்கப்பட்ட மற்றும் மக்களால் துடைத்தெறியப்பட்ட ஒரு நபரை அல்ல, மரியாதைக்குரிய அனைத்து மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய ஒருவரையே மக்கள் விரும்புகிறார்கள் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடியிலிருந்து எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் முன்னேறுவது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம், இந்த அமைப்பில் முழுமையான மாற்றம் தேவை. அது தற்போதைய நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்கள் மூலம் நடப்பதற்கு வாய்ப்பில்லை” என்றார்.
இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய ஒரு பக்கச்சார்பற்ற நபரால் மட்டுமே இது நிகழ முடியும் என்று மெல்கம் கர்தினால் ரஞ்சித் மேலும் குறிப்பிட்டார்.
மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் அந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகவும், அந்தக் கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்றும், மதகுருமார்களின் குரலுக்கு மதிப்பளிப்பார் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.