2 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலானது!

2 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலானது!

இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட 8 மணித்தியாலங்களினுள்  நாட்டின் அனைத்து நகரங்களிலும் இன்று காலை முதல் மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆவது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க, நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த  ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை தற்காலிகமாக தளர்த்தப்பட்டது.

மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம், நாளைய தினம் காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய சேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக நகரங்களை நோக்கிப் பயணித்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டபோதிலும், கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களிலும், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காவல்துறை மற்றும் இராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகள் அவ்வாறே நடைமுறையில் காணப்பட்டன.

இதற்கமைய, குறித்த இடங்களில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பாதுகாப்புத் தரப்பினர் சோதனைகளை முன்னெடுப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததென எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதை அடுத்து, தொடர்ந்து சேவைகள் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், போதியளவு எண்ணிக்கையிலான தொடருந்துகள் சேவையில் ஈடுபடாமையால், பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.