நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 230 பேர் கைது

நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 230 பேர் கைது

கடந்த 9ஆம் திகதி கொள்ளுபிட்டி மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 230பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இதன்படி 170பேரிடம் இதுவரையில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியாக வீடுகளை சேதப்படுத்தியமை, தீ வைத்தமை, வாகனங்களுக்கு சேதப்படுத்தியமை உள்ளிட்ட 707சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்ந்தும் கிடைத்த வண்ணம் உள்ளன.
 
இந்தநிலையில் இதுவரையில் 230பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களில் 68பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக  காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

இதேவேளை, அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையதாக சாட்சியங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் மொரட்டுவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் மொரட்டுவை - மொரட்டுவெல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கைதானவர், மொரட்டுவை மாநகர சபையில் சேவையாற்றும் 49 வயதுடைய ஊழியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.