தொலைபேசியால் விபத்தில் பறிபோன உயிர்!
பொலன்னறுவை - மஹியங்கனை வீதியின் 41 ஆவது மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் ஓட்டுநருடன் மற்றுமொரு நபரும் பயணித்துள்ளதுடன், இந்த விபத்தில் அவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது வந்த தொலைபேசி அழைப்பிற்குப் பதிலளிப்பதற்காகக் கையடக்கத் தொலைபேசியை எடுக்க முற்பட்ட போதே, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர் பல்லேகம, சிறிபுர பகுதியைச் சேர்ந்த விஹங்க பாலித்த ஜயலத் என்ற 23 வயதுடைய இளைஞராவார்.
சம்பவம் தொடர்பில் தெஹியத்தகண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.