பட்டதாரிப் பெண் சடலமாக மீட்பு - காவல்துறை விசாரணை
இரத்தினப்புரி - எலபாத்த, நிரியெல்ல பிரதேசத்தில் நேற்று (27) பிற்பகல் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பிரதேசவாசிகளின் அறிவித்தலைத் தொடர்ந்து கொலைச் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எலபாத்த காவல்துறையினர் தெரிவித்தனர்.
நிரியெல்லவைச் சேர்ந்த சுவினி தினாதரி ஜயசிங்க (25) என்பவரின் சடலம் என அடையாளம் காணப்பட்டது.
பணி நிமித்தமாக இரத்தினபுரிக்குப் பேருந்தில் செல்வதற்காக நேற்று காலை 06.30 அளவில் வீட்டிலிருந்து அவர் புறப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டதாரி எனவும், இரண்டு மாதங்களுக்கு முன்னர் பல்கலைக்கழக கல்வியை முடித்துள்ளார் எனவும் காவல்துறை மேலும் தெரிவித்தனர்.
இது கொலையாக இருக்கலாம் எனவும் கொலைக்கு முன் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இரத்தினபுரி மற்றும் நிவித்திகல காவல் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.