சிறிலங்கா இராணுவ அதிகாரி உட்பட இருவர் அதிரடியாக கைது..!

சிறிலங்கா இராணுவ அதிகாரி உட்பட இருவர் அதிரடியாக கைது..!

நுவரெலியா பகுதியில் துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்களை கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் 39 வயதுடையவர் எனவும் அவர் அதுருகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருடன் கைது செய்யப்பட்டுள்ள மற்றைய நபர் இரத்தினபுரி இராணுவ முகாமில் கடமையாற்றும் சிறிலங்கா இராணுவத்தின் கப்டன் தர அதிகாரி ஆவார்.

சிறிலங்கா இராணுவ அதிகாரி உட்பட இருவர் அதிரடியாக கைது | Two People A Sri Lanka Army Officer Were Arrested

நுவரெலியா, கிரிகோரி ஏரிக்கு அருகில் உள்ள அரச சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு, ரி-56 ரக துப்பாக்கி ,இரண்டு கைத்துப்பாக்கிகள் அவற்றுக்குரிய தோட்டாக்கள் மற்றும் 167 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

ரி-56 ரக துப்பாக்கியின் இலக்கம் காவல்துறையால் கைப்பற்றப்படும் போது அழிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

மினுவாங்கொடை பிரதேசத்தில் சிறைக்காவலர் ஒருவர் வீட்டுக்குச் சென்று துப்பாக்கியை காட்டி கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ள ரி-56 ரக துப்பாக்கி ஹோமாகம நியந்தகல பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி என தற்போது தெரியவந்துள்ளது.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் போதைப்பொருள் வியாபாரி ஒருவரே இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபருக்கு நீதவான் நீதிமன்றங்களால் இரண்டு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் இவருக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மற்றும் துப்பாக்கிகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் இருவரும் 72 மணிநேரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.