
முறையற்ற சாரத்தியம் - 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்..!
முறையற்ற சாரத்தியம் காரணமாக 16 மோட்டார் சைக்கிள்கள் கடுவெல போக்குவரத்து காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நேற்று மாலை(16) கடுவெல வெலிவிட்ட வெவ வீதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது.
இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக சென்றது மாத்திரமல்லாமல், சிலர் ஒற்றைச் சக்கரத்துடன், தலைக்கவசம் அணியாமல் வீதியில் சாகசம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த இளைஞர் குழுவினர் காவல்துறையினரின் உத்தரவிற்கு மதிப்பளிக்காமல் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அவர்களைத் துரத்திச் சென்று 16 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர்.
வாகனங்களை செலுத்தி வந்த சந்தேக நபர்கள் 18 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் வெல்லம்பிட்டிய, முல்லேரியா, அங்கொட, மாலபே மற்றும் களனிமுல்ல பிரதேசங்களில் வசிப்பவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் நாளை (18) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவெல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.